
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு அரச முறைப் பயணமாக இன்று (03) இலங்கை வரவுள்ளார். 2023ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும் அவர், எதிர்வரும் 6ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி முய்ஸ்சு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
ஜனாதிபதி முய்ஸ்சுவின் வருகையை முன்னிட்டு, இன்று (03) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.





