
அமெரிக்க டொலரின் தளம்பல் நிலை, சர்வதேச மோதல்களால் உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணம் என்பன இலங்கையின் நுகர்வோரையும் வர்த்தகர்களையும் ஒருமித்த அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளன.
புறக்கோட்டை வர்த்தகத் துறையினர் மற்றும் நுகர்வோர் தரப்பிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இறக்குமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மிகக் குறைந்த இலாப வரம்பிலேயே இயங்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்
உள்ளீடுச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், கேள்வி குறைவதைத் தவிர்க்க இறக்குமதியாளர்கள் நஷ்டத்தைச் சுமக்கின்றனர்.
குறிப்பாக வெள்ளைப்பூண்டு போன்ற பொருட்களில் ஒரு கிலோவுக்கு 60 – 70 ரூபா வரை நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
சந்தையில் புதிய இறக்குமதியாளர்கள் அதிகரித்துள்ளதால் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. அடுத்தடுத்த கப்பல் சரக்குகளை விடுவிக்க கையில் பணப்புழக்கம் தேவை என்பதால், தற்போதைய கையிருப்பைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய போதிலும், அது புத்தாண்டுக்கு சில நாட்களுக்கு முன்னரே வழங்கப்பட்டது. கப்பல்கள் ஏப்ரல் 12-13 அளவில் வந்தடைந்தபோது விடுமுறை காலம் என்பதால் தொழிலாளர்கள் இன்றி சரக்குகள் தேக்கமடைந்தன.
இதன் விளைவாக 100,000 டொன் அரிசி மேலதிக கையிருப்பால் நஷ்டத்தில் விற்கப்பட்டது. இறக்குமதியாளருக்கு ஒரு கிலோ 248.50 ரூபாவாக அமையும் நிலையில், வர்த்தமானி விலை 255 ரூபாவாக உள்ளது. போக்குவரத்துச் செலவு சேர்த்தால் இலாபமே இல்லை என்பதால் வர்த்தகர்கள் இதனைக் கொள்வனவு செய்யத் தயங்குகின்றனர்.
30 அல்லது 60 நாட்கள் கடன் அடிப்படையில் பொருட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. முன்பதிவு செய்யும் போது டொலர் 303 ரூபாவாக இருந்து, பணம் செலுத்தும் போது 320 ரூபாவாக உயர்ந்தால், அந்தப் பாரிய வித்தியாசத்தை இறக்குமதியாளரே ஏற்க வேண்டும்.
வர்த்தகர்கள் ஒரு கிலோ அரிசியில் 2-3 ரூபா நஷ்டமடையும் போது, அரசாங்கம் வரி மூலம் ஒரு கிலோவுக்கு 65 ரூபா வரை சம்பாதிக்கிறது. சீனிக்கு 50 ரூபாவும், பருப்புக்கு 25 சதமும் வரியாக அறவிடப்படுகிறது.
வர்த்தகர்கள் ஒரு கிலோ அரிசியில் 2-3 ரூபா நஷ்டமடையும் போது, அரசாங்கம் வரி மூலம் ஒரு கிலோவுக்கு 65 ரூபா வரை சம்பாதிக்கிறது. சீனிக்கு 50 ரூபாவும், பருப்புக்கு 25 சதமும் வரியாக அறவிடப்படுகிறது.
பொருட்களின் விலை மாத்திரமன்றி சேவைகளின் விலைகளும் சத்தமின்றி உயர்ந்துள்ளன. ஏப்ரல் மாதம் முதல் அனைத்து விநியோகங்களுக்கும் 100 ரூபா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது கையிருப்பில் உள்ள பழைய மருந்துகள் ஜூன் மாதம் வரை அதே விலையில் விற்கப்படும். அதன் பின்னர் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டண உயர்வால் இலாபம் குறைந்துள்ள போதிலும், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்பதால் சிகையலங்கார நிலையங்கள் மற்றும் தையல் நிலையங்கள் இன்னும் விலையை உயர்த்தவில்லை.
கோதுமை மா விலை உயர்ந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தப் போவதில்லை என சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சாதாரண குடும்பங்களில் பாரிய உளவியல் மற்றும் சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தகர்களும் நுகர்வோரும் ஒருசேரப் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், அரசாங்கத்தின் முறையான தலையீடு மற்றும் வரிச் சலுகைகள் மட்டுமே ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





