இலங்கை

இலங்கையில் மின்-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை : 2010க்கு பின் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்!

இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்யவும், வருங்காலத் தலைமுறையினரை புகையிலை பழக்கத்திலிருந்து முழுமையாகப் பாதுகாக்கவும் அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஆனந்த ரத்நாயக்க இது குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைத்து, மின்-சிகரெட்டுகள் மற்றும் ‘வேப்பிங்’ (Vaping) சாதனங்களின் விற்பனை, இறக்குமதி, உற்பத்தி ஆகியவற்றுடன் அவற்றைப் பயன்படுத்துவதையும் முழுமையாகத் தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த எவரும் தமது வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாதவாறு சட்டங்கள் திருத்தப்படவுள்ளன.

 

புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் போது, வாடிக்கையாளரின் அடையாள அட்டையைச் சோதித்து அவர் 2010க்கு முன் பிறந்தவரா என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரம் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.

மாலைதீவு (2007க்கு பின் பிறந்தவர்களுக்கு), ஐக்கிய இராச்சியம் (2009க்கு பின் பிறந்தவர்களுக்கு) போன்ற நாடுகள் ஏற்கனவே இவ்வாறான சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

 

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது பாரிய குற்றமாகக் கருதப்பட்டு ஆயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது. அதே போன்றதொரு கடுமையான போக்கை இலங்கையிலும் கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடமிருந்து மின்-சிகரெட் சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

 

எனினும், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டங்கள் இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளன. புதிய திருத்தங்கள் மூலம் இவற்றைப் பயன்படுத்துவதும் சட்டவிரோதமாக்கப்படும்.

எதிர்காலத் தலைமுறையினரைப் புகையிலை மற்றும் மதுசாரத்தினால் ஏற்படும் தீமைகளிலிருந்து பாதுகாப்பதே எமது நோக்கம். இதற்காக 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்,” என கலாநிதி ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

 

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இந்த முன்மொழிவுகளுக்குத் தனது இணக்கத்தைத் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் இவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button