இலங்கை

தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்கவைக்கலாமென எவரும் எண்ணலாகாது – அமைச்சர் சந்திரசேகர்

இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று எவரும் நினைக்கக்கூடாது என்றும் அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை என்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பாராளுமன்ற சலுகைகளை பயன்படுத்தி மிக மோசமான கருத்துக்களை சபையில் முன் வைத்து வருகின்றார். நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்களாகின்றன. 47 வருடங்களுக்கு முன்னரான நிலைமையை நாம் பார்த்தால் பல்வேறு நெருக்கடிகளை நாடு சந்தித்தது. தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது, தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அத்துடன் யாழ். நூலகம் எரிக்கப்பட்ட போதும் யாழ். மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலை நடத்தாமல் வடக்கு இளைஞர்கள் ஜனநாயக நீரோட்டத்திற்கு வருவதற்கு தடுக்கப்பட்ட நிலைமைதான் யுத்தமாக மாறியது.

 

அப்போது நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது இந்த மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர், அவரின் தாத்தா, அவரது அப்பா மற்றும் அவரையும் எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களை கொன்று குவித்த நபர்களோடு கூட்டு சேர்ந்திருந்தவர்கள். இந்த சபையில் ராஜபக்‌ஷக்களின் குடும்பம், அவர்களின் ஆதரவுடன் தமிழர்களை வேட்டையாடும் குழுக்கள் இருந்தன. அவர்களுடன் இணைந்து தமிழ் மக்களை வேட்டையாடிய நபர் இன்று நீலிக் கண்ணீர் வடித்து தமிழ் மக்கள் மீது கருணைக் காட்டும் நபராக மாறியுள்ளார்.

 

இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று நினைக்கிறார்கள். அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்று இல்லை. முற்றிலும் மாறியுள்ள வடக்கு,கிழக்கேயுள்ளது

 

மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர், கொழும்பிலிருந்து சுத்துமாத்து செய்கின்ற நபரோடு சேர்ந்து, யாழ்ப்பாணத்திற்கு வரும் போது வேட்டியோடும், கொழும்பில் கோட் சூட்டுடனும் திரிவதுடன் தங்களின் பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் செய்துவைத்து சொகுசாக வாழ்கின்றனர். இவர்கள் மீண்டும் தமிழ் மக்களிடையே இனவெறியை தூண்டுகின்ற, வெறியாட்டம் ஆடுகின்றனர். அவர்களின் வெறித்தனம் கபட நாடகங்கள் செல்லுபடியாகாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button