இலங்கை

இலங்கைக்கு விரைவில் புதிய கடன் பொதி?

இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கிடையில் பணியாளர் மட்டத்திலான உடன்பாடு கடந்த வியாழக்கிழமை எட்டப்பட்டுள்ளது.

 

இந்த மீளாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிக் குழுவின் தலைவர் இவான் பாபஜார்ஜியோ தெரிவித்துள்ளார்.

 

இவான் பாபஜார்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் கடந்த மார்ச் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொண்டதுடன், அரசாங்கத்தின் உயரதிகாரிகளுடன் நிதி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான ஆலோசனைகளையும் நடத்தினர்.

 

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான மீளாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்குத் தேவையான தகவல்கள் மற்றும் அறிக்கைகளும் இருதரப்புகளுக்கிடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை நிறைவு செய்யும் வகையில் பணியாளர் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இவான் பாப்பஜோர்ஜியோ குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைத்தவுடன், இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் பின்னணி

 

2019ஆம் ஆண்டுமுதல் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுத்த பேச்சுகளின் ஊடாக கடன் மறுசீரமைப்பின் மூலம் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான விரிவான நிதி வசதி திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

 

இந்த திட்டத்தின் கீழ் அரசின் நிதி கட்டுப்பாடு, வரி சீர்திருத்தம், அரசாங்க நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் வெளிநாட்டு கடன் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

புதிய மீளாய்வு அங்கீகரிக்கப்பட்டால், இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் இது உதவியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button