
அமெரிக்கா தற்போது ஈரானுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகவும், ஈரானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமானது மிகவும் ஆக்கபூர்வமான ஒன்றாக அமையும் எனத் தாம் கருதுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் அவர் பதிவு ஒ்ன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த இணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக, ஈரான் இனிமேல் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிலத்தடியில் மிகவும் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ள ஈரானின் அணுசக்தி சார் மூலப்பொருட்களை அகற்றுவதற்குத் தெஹ்ரானுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியிலிருந்து எதுவுமே மாற்றமடையவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஈரான் மீதான வர்த்தக வரிகள் மற்றும் தடைகளை நீக்குவது குறித்துத் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள 15 முக்கிய அம்சங்களில் பெரும்பாலானவற்றிற்கு ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது பிராந்திய அரசியலில் ஒரு பாரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது





