இலங்கை

இலங்கையில் புதிய ‘உணவுப் பாதுகாப்பு அதிகாரசபை’: சுகாதார அமைச்சு அதிரடித் திட்டம்!

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையை போன்றதொரு பலமான புதிய அதிகாரசபையை நிறுவுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் ‘உணவுப் பாதுகாப்பு’ தொடர்பாக பல நிறுவனங்கள் இருந்தாலும், ‘உணவுத் தரம் மற்றும் பாதுகாப்பு’ குறித்த தொழில்நுட்ப அறிவு மற்றும் சட்டதிட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

“தொற்றாத நோய்கள் மற்றும் உடல் பருமன் குறித்து மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு உள்ளது. ஆனால், உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் குறித்துப் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை.” எனக் குறிப்பிட்டார்.

 

உணவில் கலந்துள்ள கண்ணுக்குத் தெரியாத காரணிகளைக் கண்காணிக்க முறையான தரவு அமைப்பு அவசியம் என அமைச்சு கருதுகிறது.சில வகை உணவுகளில் உருவாகும் பூஞ்சை நச்சுகள்,ஈயம், பாதரசம் போன்ற ஆபத்தான தாதுக்கள் கடல் உணவுகள் மற்றும் பொதி செய்யப்பட்ட உணவுகளில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மிதமிஞ்சிய இரசாயனங்களின் எஞ்சிய பகுதிகள் என்பவற்றை கண்காணிப்பது அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சந்தையில் கிடைக்கும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தவும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும் சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் சத்தான உணவுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் மாணவர்கள் வீட்டிலிருந்து சத்தான உணவுகளைக் கொண்டு வருவதை ஊக்குவித்தல்.

 

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘போக்குவரத்து சமிக்ஞை விளக்கு’ போன்ற அமைப்பில் சீனியின் அளவைக் கண்காணித்தல் மற்றும் சீனி மீதான வரியை அதிகரித்தல் போன்ற பல விடயங்கள் இவற்றில் உள்ளடங்கும்.

 

இலங்கையர்கள் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதால் தொற்றாத நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, ‘சமச்சீர் உணவு’ முறையை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

உணவில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரை வந்தடையும் வரை அவற்றைக் கண்காணிக்கும் ஒரு முறையான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உணவின் பாதுகாப்பை ஆரம்பத்திலிருந்தே உறுதி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button