
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, இலங்கையின் சர்வதேச தபால் சேவைகளுக்கு பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தபால் பொதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பாரம் எடுக்கப்பட்ட பொதிகள் கூட இன்னும் அனுப்பப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
தபால் தாமதம் காரணமாக எளிதில் அழுகக்கூடிய அல்லது துர்மணம் வீசக்கூடிய பொருட்களை அனுப்புவதைத் தவிர்க்குமாறு அல்லது அதன் அவதானத்தை உணர்ந்து செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலைமையை சீர்செய்ய அந்தந்த நாடுகளின் தபால் நிர்வாகங்களுடன் இலங்கை தபால் திணைக்களம் தொடர்பில் இருந்து வருகின்றது.
நிலைமை வழமைக்குத் திரும்பியவுடன் சர்வதேச தபால் சேவைகள் மீண்டும் வழமைபோல் ஆரம்பிக்கப்படும் என தபால் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.





