
ஜப்பானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கீழவைக்கான இடைத்தேர்தலில், பிரதமர் சனா டகாயிச்சி தலைமையிலான ஆளும் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் முதல் பெண் பிரதமராக சனா டகாயிச்சி பதவியேற்று நான்கு மாதங்களின் பின்னர், மக்களிடம் நேரடி அங்கீகாரம் பெறுவதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில், ஜப்பானின் நாடாளுமன்றக் கீழவையில் உள்ள 465 இடங்களில், பிரதமர் சனா டகாயிச்சியின் லிபரல் டெமோக்ரடிக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 352 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி மாத்திரம் தனியாக 316 இடங்களை வென்று, ஆட்சியமைப்பதற்குத் தேவையான 233 என்ற பெரும்பான்மை பலத்தை விட அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதன் ஊடாக ஜப்பான் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை சனா டகாயிச்சியின் கூட்டணி பெற்றுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வெறும் 113 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளன.





