
நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் கடுமையாக சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக்கட்டியெழுப்புவதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட 10 பெய்லி பாலங்களைப் பொருத்தும் பணிகள், ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலங்களை நிறுவுவதற்கு இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்
இந்தப் பாலங்களை ஏற்றி வந்த இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐ.என்.எஸ் காரியல்’ கப்பல், பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, சூறாவளி பாதிப்புகளைச் சீரமைக்க அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சிறப்பு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இந்தப் பாலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டித்வா சூறாவளியினால் பாலங்கள் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த பகுதிகளில், போக்குவரத்துத் தொடர்புகளை மீண்டும் சீரமைப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
இந்த துரித புனரமைப்புப் பணிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.





