இலங்கை

டிட்வா சூறாவளி நிவாரணம்: ஐநாவின் திட்டத்துக்கு 22.4 மில்லியன் டொலர் நிதி குவிந்தது

இலங்கையில் கடந்த வருடம் வீசிய ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்துக்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்துள்ளது.

 

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு இலக்கு நிர்ணயித்திருந்தது.

இதற்காக தற்போது வரை 22.4 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ளது.

 

இந்தத் திட்டத்துக்காக அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியுள்ளன.

 

இதுவரை 25 மாவட்டங்களில் 68 பங்குதாரர் அமைப்புகளின் ஊடாக 216,000-க்கும் அதிகமான மக்கள் இந்த நிவாரணத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

 

கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கை சந்தித்த மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவை இந்தச் சூறாவளி ஏற்படுத்தியது.

 

நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி வரை 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர்.

 

நிவாரணப் பணிகளை இலங்கை அரசாங்கம் முன்னின்று நடத்துவதுடன், ஐக்கிய நாடுகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இதற்குப் பக்கபலமாகச் செயல்படுகின்றன.

 

கல்வி, உணவுப் பாதுகாப்பு, விவசாயம், ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் தங்குமிட வசதி ஆகிய துறைகளுக்கு இந்த முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button