உலகம்

தாய்வான் நீரிணையில் போர் அபாயம்? அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கு எதிராக இலங்கையில் குரல்

சீனாவின் தாய்வான் மாகாணத்திற்கு 11.1 பில்லியன் டொலர் மதிப்பிலான முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளமைக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

 

அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜி. வீரசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

 

 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் செயலாகும். அதிநவீன ஏவுகணைகள் மற்றும் பீரங்கி அமைப்புகளைத் தாய்வானுக்கு வழங்குவது ஆசிய பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.

 

இது தாய்வான் நீரிணைப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்து, அப்பகுதி மக்களை ஒரு போர் அபாயத்திற்குள் தள்ளும் என கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

 

தாய்வான் என்பது சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதைச் சர்வதேச சட்டங்களும் வரலாறும் உறுதிப்படுத்தியுள்ளன.

 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 2758 ஆவது தீர்மானத்தின்படி, சீன மக்கள் குடியரசு மாத்திரமே சீனாவின் ஒரே சட்டபூர்வமான பிரதிநிதியாகும். அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ‘ஒரே சீனா’ (One China) கொள்கையை மீறுவதாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

இலங்கை வரலாற்று ரீதியாக ‘ஒரே சீனா’ கொள்கையை உறுதியாகப் பின்பற்றி வருகிறது. குறிப்பாக, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் சீனாவுடன் கையெழுத்திடப்பட்ட கூட்டு அறிக்கையில், தாய்வான் சீனாவின் ஒரு பகுதி என்பதை இலங்கை அங்கீகரித்துள்ளதுடன், ‘தாய்வான் சுதந்திரம்’ என்ற கோரிக்கையை அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துள்ளது.

 

சர்வதேச சட்டம் மற்றும் பிராந்திய அமைதியைப் பாதுகாக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் தனது இந்த உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

மேலும், வெளிநாட்டு சக்திகளின் தலையீடின்றி சீன மக்கள் தங்கள் தேசியப் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளும் உரிமையை உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button