வோ மாநிலத்தைச் (Vaud) சேர்ந்த தேசிய சபை உறுப்பினர் மிஷேல் புஃபா (Michaël Buffat) மீது குடும்ப வன்முறை குற்றச்சாட்டு. வரும் 23 நவம்பர் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவர் சுவிஸ் மக்கள் கட்சியைச் (UDC) சேர்ந்தவர்.
மனைவியைத் தாக்கிக் காயப்படுத்தியதாகவும், மனதளவில் பாதித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. மிரட்டியது, கட்டாயப்படுத்தியது, அடைத்து வைத்தது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவை நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.
இந்த வழக்கில் அவரது மனைவியும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் பல ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கிறார்கள். மனைவி மீது காயப்படுத்தியது, மனதளவில் பாதித்தது, கட்டாயப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அனுமதி இல்லாமல் உரையாடல்களைப் பதிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வழக்கு வோ மாநிலத்தின் வடக்குப் பகுதி நீதிமன்றத்தில் (Tribunal du Nord vaudois) நடக்கும்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்த 8 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் இவை. இடையில் பல முறை பிரிந்தும் இருந்திருக்கிறார்கள். நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் வரை இருவரும் நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள். 2023 தேசியத் தேர்தல் பிரசாரத்திலிருந்து புஃபா ஏற்கனவே விலகி இருந்தார்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Sasun Bughdaryan / Unsplash





