சுவிஸ்ஸில் ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்லைன் கணக்குகளும் பாஸ்வேர்டுகளும் கிரிப்டோ பணமும் வாரிசுகளுக்குப் பெரிய தலைவலியாக மாறலாம். அதனால் உயிரோடு இருக்கும்போதே இதை ஒழுங்குபடுத்தி வைக்கச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.
இன்று எல்லோரிடமும் டஜன் கணக்கில் ஆன்லைன் கணக்குகள் இருக்கின்றன. இமெயில், சமூக வலைத்தளங்கள், மாதச் சந்தா, கடைக் கணக்குகள், வங்கி இணைப்புகள் எல்லாம் இதில் அடங்கும். ஒருவர் இறந்த பிறகும் சந்தாவுக்குப் பணம் போய்க்கொண்டே இருக்கும். முதலில் உங்கள் கணக்குகளின் பட்டியலைத் தயாரியுங்கள். பாஸ்வேர்டுகளைப் பாதுகாப்பான இடத்தில், உதாரணமாக பாஸ்வேர்டு மேனேஜர் செயலியில் வையுங்கள். நீங்கள் இறந்தால் வாரிசுகள் அதை எப்படித் திறப்பது என்பது நம்பிக்கையான ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
சட்டப்படியும் சிக்கல் இருக்கிறது. சுவிஸ் சட்டத்தில் டேட்டாவுக்குப் பொருள்களைப் போல உரிமை கிடையாது. ஹார்ட் டிஸ்க் வாரிசுகளுக்குப் போகும். ஆனால் கிளவுட் கணக்கு என்பது நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தம். சில நிறுவனங்களின் விதிகள் வாரிசுகளை உள்ளே விடாமல் தடுக்கலாம். பாசல் (Basel) பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியர் கோர்டுலா லோட்சர் (Cordula Lötscher), முக்கியமான கோப்புகளை ஹார்ட் டிஸ்க் அல்லது USB-யிலும் சேமித்து வைக்கச் சொல்கிறார்.
பிட்காயின் போன்ற கிரிப்டோ பணம் வைத்திருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதை எடுக்க தனிப்பட்ட சாவி அல்லது மீட்பு வார்த்தைகள் தேவை. அவை இல்லாவிட்டால், சட்டப்படி வாரிசுகளுக்குச் சொந்தமாக இருந்தாலும் பணத்தை எடுக்க முடியாது. வங்கி போன்ற இடைத்தரகர் அதைப் பாதுகாத்தால் வேறு வழிகள் இருக்கலாம்.
எந்த போட்டோக்களும் ஆவணங்களும் குடும்பத்துக்குப் போக வேண்டும், எந்தக் கணக்குகளை மூட வேண்டும் என்பதையும் எழுதி வையுங்கள். ஆனால் போனில் எழுதிய குறிப்பு உயில் ஆகாது. நோட்டரி எழுதும் உயில், அல்லது முழுவதும் கையால் எழுதி தேதி போட்டுக் கையொப்பமிட்ட உயில் மட்டுமே சட்டப்படி செல்லும்.
மூலம்: RSI
புகைப்படம்: FlyD / Unsplash





