பேர்ன் மாநிலத்தில் (Bern) உள்ள துூன் (Thun) நகரில், Brügger & Thomet என்ற ஆயுதத் தொழிற்சாலை வியாழன் இரவு தீயில் எரிந்து நாசமானது.
இது வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ என்று பேர்ன் மாநில போலீஸ் உறுதிசெய்துள்ளது. சேதம் 12 மில்லியன் பிராங்க் முதல் 20 மில்லியன் பிராங்க் வரை இருக்கலாம் என்று நிறுவனம் சொல்கிறது. தீ வைத்தவர்கள் யார் என்று இன்னும் தெரியவில்லை. அந்த இரவிலோ அதற்கு முந்தைய நாட்களிலோ ஏதாவது பார்த்தவர்கள் தகவல் தர வேண்டும் என்று போலீஸ் கேட்டுள்ளது.
வார இறுதியில் சமூக வலைதளங்களில் ஒரு அறிக்கை வந்தது. தங்களை அராஜகவாதிகள் என்று சொல்லும் சிலர், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அதில் கூறியிருந்தனர். இந்த நிறுவனம் LBD40 என்ற ரப்பர் குண்டுத் துப்பாக்கியைத் தயாரிக்கிறது. பிரான்ஸ் போலீஸ் ஆர்ப்பாட்டங்களில் இதைப் பயன்படுத்துகிறது. அதில் பலர் காயமடைந்ததைக் கண்டித்தே இந்தத் தாக்குதல் என்று அறிக்கை சொல்கிறது. தொழிற்சாலை மீது தீக்குண்டு வீசுவது போன்ற ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அறிக்கை உண்மையானதா என்பதை நிரூபிக்க முடியவில்லை. வீடியோவும் வெட்டி ஒட்டப்பட்டது போல இருக்கிறது. இந்த வீடியோவும் அறிக்கையும் தங்களுக்குத் தெரியும் என்றும், அவற்றையும் விசாரணையின் ஒரு பகுதியாக ஆராய்வதாகவும் போலீஸ் சொல்கிறது. பிரான்ஸ் போராட்டங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் பிரான்ஸ் அல்லது சுவிஸில் உள்ள எந்தக் குழு செய்தது என்று சொல்லும் அளவுக்கு ஆதாரம் இல்லை.
மூலம்: RSI
புகைப்படம்: Tasos Mansour / Unsplash





