இலங்கை

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மீண்டும் இலங்கையில் பரவல்: கொழும்பு, கண்டி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பாதிப்பு உறுதி!

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever) நோய் மீண்டும் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பன்றிகள் கண்டறியப்பட்டதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “உண்மையில் நாங்கள் கடந்த ஆண்டு இந்த நோய் நிலைமையைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருந்தோம். ஆனால் இந்த ஆண்டில் சில இடங்களில் இந்த நோய் மீண்டும் பதிவாகி வருவதாக எங்களுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. அதனால்தான் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். நாங்கள் 48 பண்ணைகளைச் சோதனையிட்டோம். அப்பண்ணைகளில் இனப்பெருக்கம் மற்றும் இறைச்சிக்காகப் பன்றிகளை வளர்க்கும் அனைத்து பண்ணைகளிலும் இந்த நோய் நிலைமை இருப்பது அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த 48 பண்ணைகளிலிருந்தும் சுமார் 1200 பன்றிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவற்றில் பெரும்பாலான விலங்குகளுக்கு இந்நோய்க்காரணி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஒவ்வொரு பண்ணையிலும் ஒன்று அல்லது இரண்டு விலங்குகளாவது பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 200 விலங்குகளுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித நுகர்வுக்கு இது பொருத்தமானதா என்றால், ஆம் பொருத்தமானது; இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதாவது இது மனிதர்களுக்குப் பரவும் நோய் (Zoonotic disease) அல்ல. மனிதர்களுக்குப் பரவாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வைத்தியர் பிரதீப் குமாரவடு விளக்கமளித்துள்ளார்.

 

“நாங்கள் பண்ணையாளர்களிடம் கூறுவது என்னவென்றால், இந்த நோய் குறித்து அவதானமாக இருங்கள், பயப்படத் தேவையில்லை. ஆனால் எங்களது தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் கட்டாயம் பின்பற்றுங்கள், இதன் மூலம் இந்த நோய் பதிவாவதை குறைக்க முடியும். மற்றொன்று, சிறிய அளவில் பன்றி வளர்ப்பில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள் சில வேளைகளில் தமது வீடுகளிலேயே விலங்குகளை அறுத்து, அதன் கழிவுகளை நீர்நிலைப் பகுதிகளில் கொண்டு போய் கொட்டுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். அவ்வாறு செய்யும்போது இந்த நோய் மிக விரைவாகப் பரவக்கூடும். எனவே, கழிவுகளை வெளியேற்றும் போது சரியான நடைமுறைகளைப் பின்பற்றி அகற்றுவது உங்கள் பொறுப்பாகும் என்பதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button