இலங்கை

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்திற்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTB) மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்’ ஆகியவற்றின் மூலம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) அமைய முன்னர் பதிவான மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ (Human Rights Watch) எச்சரித்துள்ளது.

 

இதன் மூலம் தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படல் ஆகியன நிகழக்கூடும் என கண்காணிப்பகம் தனது தீவிர கவலையை வெளியிட்டுள்ளது.

 

கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTB) மற்றும் ஒக்டோபர் 20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்’ என்பனவற்றின் மூலம், போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றி அதிகாரிகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்கும் சரத்துகள் உள்ளடங்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, 2024 தேர்தல் கொள்கை அறிக்கையின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை நீக்கி, நாடு முழுவதிலும் உள்ள மக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாகவே இந்த இரு சட்டமூலங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சாதாரண குற்றவியல் சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு, அதிகாரிகளுக்கு அசாதாரண அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கு இடமளிப்பதன் மூலமும், தனித்துவமான சட்டக் கட்டமைப்புகளின் மூலமும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் (PTA) காணப்பட்ட பல சிக்கலான அம்சங்கள் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டங்கள் மூலம் மீண்டும் உருவாக்கப்படும் அபாயம் உள்ளதாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ தெரிவித்துள்ளது.

 

பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குவதற்கு அனுமதியளிப்பதன் மூலம் சித்திரவதைகளை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக அமையக்கூடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலென் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.

 

இச்சட்டம் தற்போதுள்ள வடிவில் நிறைவேற்றப்பட்டால், இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த கடுமையான சட்டங்களால் ஏற்பட்டது போன்றே கடுமையான மனித உரிமை மீறல்களின் அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின்’ (PSTB) மூலம் பயங்கரவாதத்திற்குப் பரந்த வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பிடியாணை அற்ற சந்தர்ப்பங்கள் உட்பட நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் நபர்களை நிறுத்துவதற்கும், சோதனையிடுவதற்கும், விசாரணை செய்வதற்கும் மற்றும் தடுப்புக்காவலில் வைப்பதற்கும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டத்தின் கீழ் இரண்டு மாத காலத்திற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்பதுடன், அவை ஒரு வருடம் வரை நீடிக்கப்படலாம். இவ்வாறான உத்தரவுகளை ரத்து செய்வதற்கு நீதவானுக்கு அதிகாரம் இல்லை என்பதுடன், இச்சட்டமூலத்தின் சரத்துகளின் கீழ் எந்தவொரு நபரையும் குற்றச்சாட்டுகள் இன்றி அதிகபட்சமாக இரண்டு வருட காலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கு வழியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலமும் வரம்பிற்குட்பட்ட நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு வருடம் வரையிலான காலத்திற்கு, ஒரு தடவையில் இரண்டு மாதங்கள் வீதம் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெறுவதற்கு வழியமைப்பதுடன், பிணை வழங்குவதையும் கட்டுப்படுத்தியுள்ளது. கடுமையான குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் விடுவிக்கப்படுவதற்கான உரிமை விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே சாத்தியமாகும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சான்றுகளாகப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தின் சரத்துகள் தொடர்பிலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளதுடன், இதனைப் பயன்படுத்தி செல்வாக்குச் செலுத்துதல், அநீதியான முறையில் நடத்துதல் மற்றும் சித்திரவதைகளை மேற்கொள்வது ஊக்குவிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

 

இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சீர்திருத்த யோசனைகளில், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காக வாக்குமூலமானது நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததை அச்சமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த இரண்டு சட்டமூலங்களும் கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்று கூடுதல் மற்றும் சங்கங்களை அமைக்கும் சுதந்திரம் ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் அச்சமைப்பு தனது கவலையை எழுப்பியுள்ளது.

 

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில்’ பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணத்தில், அரசாங்கமொன்றிற்கு அல்லது சர்வதேச அமைப்பொன்றிற்கு ஏதேனும் ஒரு செயலைச் செய்ய வைப்பதற்கு அல்லது அதைச் செய்வதிலிருந்து தடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் செய்யப்படும் செயல்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இச்சட்டமூலத்தில் சில விலக்களிப்புகள் சேர்க்கப்பட்டிருந்தபோதிலும், இவ்வாறான பரந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சட்டப்பூர்வமான போராட்டங்கள், பொதுமக்களின் கருத்துக்கணிப்புகள் மற்றும் எதிர்க்கருத்துத் தெரிவிப்புகளை இலக்கு வைப்பதற்கு வழியேற்படும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.

 

இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலமானது கடுமையான குற்றங்களைப் பரந்த அளவில் வரைவிலக்கணம் செய்வதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றின் உறுப்பினர்தன்மையை மதிப்பிடும்போது, அறியப்பட்ட குழு உறுப்பினர்களுடன் நடத்தும் சந்திப்புகள், ஆடை அணிகலன்கள், பச்சை குத்துதல் (Tattoo), கைச் சிக்னல்கள் மற்றும் சில இடங்களுக்குச் செல்லும் விஜயங்கள் போன்ற காரணிகளைக் கவனத்தில் கொள்வதற்கு நீதிமன்றங்களுக்கு வழியமைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இச்சரத்துகள் காரணமாகக் குற்றவியல் நடத்தைகள் தொடர்பான சான்றுகளின் அடிப்படையில் அல்லாமல், நபர்களின் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இலக்கு வைக்கப்படலாம் என HRW எச்சரித்துள்ளது.

 

இச்சட்டமூலம் நீதிமன்ற உத்தரவுகளின் மூலம் தொடர்பாடல் குறுக்கீடுகள் மற்றும் மின்னணு சாதனங்களிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட பரந்த கண்காணிப்பு அதிகாரங்களையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.

 

சில சந்தர்ப்பங்களில், அதிகாரிகள் சேவை வழங்குநர்களிடமிருந்து சந்தாதாரர் அடையாளம், அழைப்பு விபரங்கள் மற்றும் சாதனத்தின் இருப்பிடத் தரவு (location data) ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவின்றியே பெற முடியும் என ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ தெரிவித்துள்ளது.

 

குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தக்கூடிய தகவல்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அறிக்கை செய்வதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஊடக சுதந்திரம் மேலும் கட்டுப்படுத்தப்படலாம் என கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

 

சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக நடத்தல் மற்றும் ஏனைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஐரோப்பிய ஒன்றியச் சந்தைக்கு விசேட வர்த்தகச் சலுகைகளை (வரிகளற்ற பிரவேசம்) வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (GSP+) திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மனித உரிமைச் சான்றிதழ்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் தொடர்பிலும் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டங்களால் சிக்கல்கள் எழும் என ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ சுட்டிக்காட்டியுள்ளது.

 

GSP+ சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக 2017 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதி அளித்தபோதிலும், தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக PTA சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளதாக கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, 2025 ஆம் ஆண்டில் PTA சட்டத்துடன் தொடர்புடைய 46 தடுப்புக்காவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மேலும் 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமளிக்கும் இந்த அதிகாரங்கள் புதிய சட்டமூலங்கள் மூலம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால், அது இலங்கையின் சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளை மீறுவதாக அமையும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) சுட்டிக்காட்டியுள்ளது.

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தும் அதேவேளையில், அதன் பயன்பாட்டை உடனடியாக இடைநிறுத்துமாறு HRW அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை மீறப்பெறுமாறும், திருத்தப்பட்ட சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் நேர்மையான, திறந்த மற்றும் தேவையான அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல்களை நடத்துமாறும் அதிகாரிகளுக்குத் தெரிவிடைத்துள்ளது.

 

எந்தவொரு புதிய சட்டத்திலும் குற்றவியல் தவறுகள் பற்றிய துல்லியமான வரைவிலக்கணங்கள், பயனுள்ள நீதிமன்ற மேற்பார்வை, சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்களுக்கு எதிரான வலுவான பாதுகாப்புச் சரத்துகள் உள்ளடங்கியிருக்க வேண்டும் என அச்சமைப்பு தெரிவித்துள்ளது.

 

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் அதன் தற்போதைய வடிவில் இருக்கும் வரை, GSP+ திட்டத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமை அர்ப்பணிப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிடக்கூடும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ கோரியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button