
பிரான்ஸ் நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறிவரும் வன்முறைகள் மற்றும் கட்டுப்பாடற்ற குடியேற்ற விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ் முழுவதும் கடந்த சில நாட்களாக பொதுச்சொத்துக்கள் மீது வன்முறைகள் வெடித்துள்ளதுடன், சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், எல்லைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று தான் எச்சரித்தும் மேக்ரான் அதைக் கேட்கவில்லை என்றும், இதன் காரணமாக பாரிஸ் நகரம் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
கண்மூடித்தனமான வெளிநாட்டு குடியேற்றமே பிரான்சில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் அடிப்படை காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, வன்முறையை கட்டுப்படுத்தத் தவறியதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், உள்துறை அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை அதிபர் மேக்ரான் நிராகரித்துள்ளார். உளவுத்துறை தோல்வி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் பிரான்ஸ் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.





