இலங்கை

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்காவிட்டால் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வோம்! – கஸ்ஸப தேரர் எச்சரிக்கை

வண. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாவிட்டால், புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வண. பலாங்கொட கஸ்ஸப தேரர் எச்சரித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர், ஞாயிற்றுக்கிழமை (18) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மீண்டும் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்வதே தமது போராட்டத்தின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தமது போராட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே தங்களின் நோக்கம் என அதிகாரிகள் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி தொடர்ந்து தமது கோரிக்கையை நிராகரித்தால், வேறு வழியின்றி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், சக பிக்குகள் வழங்க முன்வந்த மேலதிக வசதிகளைத் தான் நிராகரித்ததாக கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் சிறையில் துன்பப்படும்போது, தாம் வசதியாக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் வலியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் மீண்டும் களமிறங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் தமது கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button