
எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதேநேரம் எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை, நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போதே, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை சிரிலிய சவிய’ மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரின் மேலதிக மருத்துவ அறிக்கைகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அதுவரை பிணை வழங்குவது தொடர்பான கட்டளையை பிறப்பிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.





