உலகம்

ரியாத் விமான நிலையத்தில் பாரிய ஏவுகணை தாக்குதல்: பயணிகள் அவசரமாக வெளியேற்றம்

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியிலிருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டதுடன், 12 க்கும் மேற்பட்ட அம்பியுலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சிகளினால் சவூதி மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் இந்தச் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இருமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததுடன் விமானம் ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்திருந்தது.

இந்தச் சம்பவம் குறித்துச் சவூதி அரசின்  ஊடக அலுவலகமோ அல்லது சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையோ உடனடியாக எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘Flightradar24’ வலைத்தளத்தின் தரவுகளின்படி, ரியாத்தை நோக்கிய அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விமான நிலையத்திற்கு மேல் ஒரு ஹெலிகொப்டர் மட்டுமே வட்டமிட்டுக்கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயணிகள் விமான நிலையத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயண நேர உறுதிப்படுத்தல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எத்திஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) மற்றும் கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) ஆகிய நிறுவனங்கள் ரியாத்துக்கான பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. இச்சேவை ரத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரியாத்தில் முக்கிய வலுசக்தி மற்றும் முதலீட்டு மாநாடுகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இருப்பினும், இந்த மாநாடுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், வருகை தருபவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, யேமன் அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் ஹூதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து, சவூதி வான்வெளியை இராணுவப் போர் மண்டலமாக அறிவித்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், வணிக ரீதியிலான விமானங்கள் சவூதி வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button