
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகள் சாதாரண உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
இதேவேளை கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவது தொடர்பான தீர்மானத்தை சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொள்ள முடியாது எனவும், அது அவர் சார்ந்துள்ள மகா சங்க சபையினால் சாசன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை எனவும் மகாவிகாரை வம்சத்துக்குரிய ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரிதர்ம மகா சங்க சபையின் அனுநாயக்க தேரர் அதி.வண. அக்கேமஹ பண்டித பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (06) அனுப்பியுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கலகொட அத்தே ஞானசார தேரர் மகாவிகாரை வம்சத்துக்குரிய ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரிதர்ம மகா சங்க சபைக்கு உரித்தான பிக்குவாவார்.
அவரைத் தொடர்புபடுத்தி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் எவ்வித எதிர்ப்பையோ அல்லது கருத்தையோ நாம் முன்வைக்கவில்லை. அதேபோன்று நீதித்துறையின் உயர்ந்த நிலையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.
எனினும், ஞானசார தேரர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவி உடை அகற்றப்பட்டமை தொடர்பில் வெளியாகியுள்ள ஊடகச் செய்திகளை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.
ஒரு பிக்குவுக்கு காவி உடையை அணிவிப்பது அல்லது ஒரு பிக்குவின் காவி உடையை அகற்றுவது தொடர்பான முழுமையான உரிமை, துறவறம் பெற்றுள்ள அந்த பிக்குவுக்கும் அவர் சார்ந்துள்ள மகா சங்க சபைக்கும் உரியது.
எமது நாட்டில் நீண்டகாலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பௌத்த சமய மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு அமைவாக, ஒரு பிக்குவின் காவி உடையை அகற்றுவது தொடர்பான நடவடிக்கை, சம்பந்தப்பட்ட நிகாயத்தின் அல்லது மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய சாசன ரீதியான நடவடிக்கையாகும்.
சாசன ரீதியான விதிமுறைகளுக்கும் பாரம்பரிய நடைமுறைகளுக்கும் அமைவாக, ஒரு பிக்கு காவி உடையை அணிந்திருப்பதற்கும் அதனைத் தொடர்ந்து தன்னிடம் வைத்திருப்பதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, குறித்த பிக்குவை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் உரிய காவி உடையை அணிந்த நிலையிலேயே தோற்றமளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
இதுவரை சாசன ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பாரம்பரிய நடைமுறையைப் புறக்கணிப்பது பௌத்த சாசனத்துக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும்.
கலகொட அத்தே ஞானசார தேரர் விநய பிடகத்தின் அடிப்படையில் பிக்குவின் துறவறத்தை முற்றாக நீக்கும் அளவிலான மிகக் கடுமையான ஒழுக்கக் குற்றத்தைச் செய்த பிக்குவாகவோ அல்லது அவரது காவி உடையை அகற்றும் அளவுக்கு பாரதூரமான சாசன ரீதியான காரணம் காணப்படும் பிக்குவாகவோ இருப்பதாக எமது சங்க சபைக்கு இதுவரை எந்தவித அறிக்கையும் கிடைக்கவில்லை.
அதேபோன்று, சாசன ரீதியாக அவரைத் தொடர்புபடுத்தி விசாரணை நடத்துவதும், அதன் பின்னர் அவரது காவி உடையை அகற்றுவதா அல்லது தொடர்ந்து காவி உடையை அணிந்திருப்பதற்கு அனுமதிப்பதா என்பதைத் தீர்மானிப்பதும் எமது சங்க சபைக்குரிய பொறுப்பாகும்.
எனவே, கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றாமல் இருப்பதுடன், அவர் காவி உடையை அணிந்த நிலையிலேயே வெளியில் தோற்றமளிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளிடம் கருணையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அதி.வண. அக்கேமஹ பண்டித பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் அக் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்துக்கும் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது






