
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச கிளையின் பதில் தலைவரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான கிட்டிணபிள்ளை சிவகுரு தலைமையில் முல்லைத்தீவு நகரில் பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு பொதுச் சுடரினை மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் இ. நளனி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் செந்தூரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜமால்டின் றிஸாம் ஆகியோர் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை துணைத் தவிசாளர் சு.பரந்தாமன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மிக்கேற்பிள்ளை ஜோன்சன் மோகனராஜா ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் தொடர்ச்சியாக மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் இ. நளனியின் அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









