இலங்கைசுவிஸ்பிரான்ஸ்

சுவிசுக்கு 110 டன் உணவுப் பொருட்கள் கடத்தல்: 5 பேர் கொண்ட கும்பல் கைது!

 

பிரான்ஸிலிருந்து சுவிற்சர்லாந்துக்குள் சுமார் 110 டன் அறிவிக்கப்படாத உணவுப் பொருட்களைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்த சர்வதேசக் கும்பல் ஒன்றை வாட் மாநிலக் காவல்துறையும், சுவிஸ் கூட்டாட்சி சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையும் (BAZG) இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்தக் கும்பல், கடத்தி வரப்பட்ட உணவுப் பொருட்களை ஜெனீவா மற்றும் வாட் மாகாணங்களில் உள்ள 8 வணிகக் கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் சுமார் 81,000 சுவிஸ் பிராங்குகள் (சுமார் 75,000 பிராங்குகள் சுங்க வரி மற்றும் 6,000 பிராங்குகள் மதிப்புக்கூட்டல் வரி) அளவிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Bursins பகுதி நெடுஞ்சாலையில் பிரான்ஸ் நாட்டுப் பதிவு எண் கொண்ட சரக்கு வாகனம் ஒன்றை வாட் மாநிலக் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மறித்துச் சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் வரி செலுத்தப்படாத 3,300 கிலோ உணவுப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சூரியகாந்தி எண்ணெய், வாழைப்பழங்கள், வெங்காயம் மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

இந்தக் கடத்தல் நடவடிக்கைக்கு பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் தலைமை தாங்கியுள்ளார். அவருடன் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இரண்டு இலங்கை நாட்டவர்கள், ஒரு பிரெஞ்சுப் பெண் மற்றும் கைது செய்யப்பட்ட ஓட்டுநர் என மொத்தம் 5 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

 

முதல் ஓட்டுநர் பிடிபட்டதைத் தொடர்ந்து, இந்தக் கும்பல் தங்களது கடத்தல் பாணியை மாற்றியுள்ளது. பிரான்ஸ் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கேரேஜில் பொருட்களை முதன்முதலில் சேமித்து வைத்து, பின்னர் சிறிய வாகனங்கள் மூலம் குறைந்த அளவுகளாகப் பிரித்து சுவிற்சர்லாந்துக்குள் கடத்தி வந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 110 டன் பொருட்களில், சர்வதேச அளவில் சமூக வலைத்தளங்களில் மிகவும் புகழ்பெற்ற தென்கொரியாவின் ‘Buldak’ கார நூடுல்ஸ் மட்டும் சுமார் 5.5 டன் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிற்சர்லாந்தின் முன்னணி செய்தி நிறுவனமான 24 Heures வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சுங்க வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத வணிக நடவடிக்கை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button