
யாழ்ப்பாணம் – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா கடந்த (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் (யாழ் ,கிளிநொச்சி கிளை) தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல் அஸீஸ் (காஸிமி) கிராஅத்துடன் ஆரம்பமானது.
சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பிரதம அதீதியாக நிகழ்வில் பங்கேற்றார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பிரதிநிதியாக, ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் கலந்துகொண்டிருந்தார்.
பள்ளிவாசல் பொருளாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். நியாஸ் தலைமையுரையைத் தொடர்ந்து, மண்கும்பான் கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அ. அன்ரன் ஜேசுதாசன் கிராம மட்டத் தமிழ் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, பள்ளிவாசல் மீள் கட்டுமானத்துக்கான அடிக்கல் நடும் பிரதான நிகழ்வும், பின்னர் லுஹர் தொழுகை இடம்பெற்றது. வந்திருந்த சகல மக்களுக்கும் கிடுகுச் சோறு வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், க. இளங்குமரன், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பைசல், வேலனை பிரதேச சபைத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், வேலனை பிரதேச செயலாளர் த. அகிலன் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கட்டுமானக் குழுவினர், அரச அதிகாரிகள், பொலிஸ், படை அதிகாரிகள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







