
இலங்கை மஹர சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து ஒரு கைதி உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைதிகளின் நலநிலை குறித்து அறிந்துகொள்ள உறவினர்கள் சிறைச்சாலைக்கு வந்தபோது இந்தச் சம்பவம் ஆரம்பமானதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் இருந்த சில கைதிகள் கற்களை வீசியதாகவும், இதனால் பதற்றம் தீவிரமடைந்ததாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைதியின்மையின் போது, சில கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த தற்காலிக கட்டமைப்பை உடைத்து தப்பிச் செல்ல முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, சிறைச்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பல கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், அமைதியின்மையின் போது மற்றொரு குழு கைதிகள் சிறைச்சாலை கட்டடம் ஒன்றுக்கு தீ வைத்ததாகவும்சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார், விசேட அதிரடிப்படை (STF), இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சிறைச்சாலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





