
இங்கிலாந்துக்கு எதிரான 1-0 பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு, 2026 FIFA உலகக் கோப்பை அரையிறுதியில் 2-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்ற அர்ஜென்டினா வீரர்கள், போட்டிக்குப் பிறகு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
போட்டி முடிந்ததும், அர்ஜென்டினா வீரர்களான ஜியோவானி லோ செல்சோ மற்றும் நிக்கோலஸ் ஒட்டாமெண்டி, “Las Malvinas son Argentinas” (“மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை”) என்று எழுதப்பட்ட பதாகையை மைதானத்திற்குள் கொண்டு வந்தனர்.
இந்த வாசகம், பிரிட்டனில் Falkland Islands என்றும், அர்ஜென்டினாவில் Islas Malvinas என்றும் அழைக்கப்படும் தீவுகளை குறிக்கிறது. இந்த தீவுகளைச் சுற்றிய உரிமைத் தகராறு காரணமாக, 1982ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் அர்ஜென்டினா இடையே 74 நாட்கள் நீடித்த போர் நடைபெற்றது. அந்தப் போரில் 649 அர்ஜென்டினர்கள் மற்றும் 255 பிரிட்டிஷ் குடிமக்கள் உட்பட 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1982 போருக்குப் பிறகு, பிரிட்டன் மீண்டும் Falkland தீவுகளின் கட்டுப்பாட்டைப் பெற்றது. இருப்பினும், அந்தத் தீவுகள் தங்களது தேசிய அடையாளத்தின் முக்கிய அங்கம் என அர்ஜென்டினா தொடர்ந்து கருதி வருகிறது.
இந்தப் பதாகை, FIFA-வின் அரசியல் செய்திகளைத் தடைசெய்யும் விதிமுறைகளை மீறியிருக்கலாம் என்பதால், அர்ஜென்டினா அணிக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போது அர்ஜென்டினா, கத்தார் 2022 உலகக் கோப்பை பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது.
அரையிறுதி போட்டியில், 55ஆவது நிமிடத்தில் ஆண்டனி கார்டன் அடித்த கோலால் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆனால், 85ஆவது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் தொலைதூரத்திலிருந்து அடித்த கோலால் அர்ஜென்டினா சமநிலை பெற்றது. பின்னர், கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில் லௌட்டாரோ மார்டினஸ்தலையால் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு வெற்றியை உறுதி செய்தார்.
The Guardian வெளியிட்ட செய்தியின்படி, காலிறுதியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய பின்னர், சில அர்ஜென்டினா வீரர்கள்:
> “மால்வினாஸுக்காக, டியாகோ (மரடோனா)க்காக, லியோ (மெஸ்சி)யின் கடைசி உலகக் கோப்பைக்காக”
என்று முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் பதாகை எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், Associated Press செய்தியின்படி, உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு Falkland/Malvinas தொடர்பான கொடிகள் மற்றும் பதாகைகளை ரசிகர்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அர்ஜென்டினாவின் பாதுகாப்பு அமைச்சர் அலெஹான்ட்ரா மொன்டியோலிவா, FIFA-வின் அரசியல் பிளவை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களைத் தடைசெய்யும் ஒழுக்க விதிமுறைகள் காரணமாக, Falkland தீவுகளின் படங்களை உள்ளடக்கிய சில கொடிகள் மற்றும் பதாகைகள் அனுமதிக்கப்படமாட்டாது என்று முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு, புவனஸ் ஐரஸில் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
FIFA ஒழுக்க விதிமுறைகளின்படி, ரசிகர்கள் அரசியல், அவமதிப்பு அல்லது பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் கோஷமிடவோ, பாடல்களைப் பாடவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள பிரிட்டனின் உயர்மட்ட பிரதிநிதியான ரேச்சல் காலவே, மால்வினாஸ், டியாகோ மரடோனா மற்றும் லியோனல் மெஸ்சி குறித்து அர்ஜென்டினா ரசிகர்கள் தொடர்ந்து பாடல்கள் பாடலாம் எனத் தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
அட்லாண்டா First News-க்கு அளித்த பேட்டியில், “அவர்கள் அந்த விஷயங்களைப் பற்றி பாடலாம்; ஆனால் இறுதியில் நாம் ஒன்றாகச் செயல்பட ஒரு வழியை கண்டுபிடிக்கிறோம்” என்று அவர் கூறினார்.





