
பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் 5ஆவது கடற்படைத் தளத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், கடற்படை ஆதரவு மேலாண்மை மையம், களஞ்சியங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் மீது “நொறுக்கும் பதிலடி” தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இன்றுக் காலை வெளியிட்ட அறிக்கையில், மோதல் தொடருமானால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி வழித்தடங்களும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று IRGC எச்சரித்துள்ளது.
அரசுத் தொலைக்காட்சி IRIB வெளியிட்ட அறிக்கையில், “இப்பிராந்தியத்தின் எரிசக்தி ஏற்றுமதி அனைவருக்கும் இருக்க வேண்டும்; இல்லையெனில் யாருக்கும் இருக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிராந்திய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற எச்சரிக்கையையும் ஈரான் விடுத்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க இராணுவம், ஜூலை 14 இரவு 10.00 மணி (அமெரிக்க கிழக்கு நேரம்), அதாவது ஜூலை 15 அதிகாலை 2.00 மணி (GMT) அளவில், ஈரான் மீது மேலும் ஒரு சுற்று தாக்குதல்களை நிறைவு செய்ததாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பல டஜன் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் இணைந்து, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடற்படை திறன்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மீது துல்லியத் தாக்குதல்களைமேற்கொண்டதாகவும், இந்த நடவடிக்கை சுமார் ஏழு மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் நோக்கம், வணிகக் கப்பல் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் கப்பல் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதாகும் என அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
அதேநாளில், ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்களுக்கு எதிரான கடற்படை முற்றுகையையும் அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 14 மாலை 4.00 மணி (அமெரிக்க கிழக்கு நேரம் / 20:00 GMT) முதல் அமலுக்கு வந்ததாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.





