
இலங்கையில் சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், சிறுவர் இல்லங்களிலிருந்து இளைஞர், யுவதிகளாக வெளியேறுபவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின்போது, வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் கள மட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் அமைச்சருக்கு விரிவாக விளக்கமளித்தார்.
குறிப்பாக, சிறுவர் பராமரிப்பு தொடர்பில் காணப்படும் சட்ட ஏற்பாடுகளின் போதாமை சுட்டிக்காட்டப்பட்டன.
போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கென பிரத்தியேக புனர்வாழ்வு மையம் வடக்கு மாகாணத்தில் இல்லாமையால், அவர்களை சான்று பெற்ற பாடசாலைகளில் இணைக்கும்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உளநலத் தேவைப்பாடுடைய சிறுவர்களைப் பராமரிப்பதற்கென அரச சிறுவர் இல்லங்கள் இன்மையால் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.






