
5000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு – 10,000 சலங்கைகள் ஒரே தாளத்தில் ஒலித்தன
கொழும்பு, ஜூன் 14 –
காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற “சங்கமம் 2026” நிகழ்வு, 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் இணைந்து 10,000 கால் சலங்கைகளை ஒரே தாளத்தில் ஒலிக்கச் செய்ததன் மூலம் கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோள், வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், சங்கமம் குளோபல் அகடமி மற்றும் சங்கமம்லியா ஹொலிடேஸ் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில், கடல் அலைகளின் ஓசையை விட சலங்கைகளின் ஓசை காலி முகத்திடலை அதிர வைத்தது. பரதநாட்டியத்தின் ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் கலைநயத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், பங்கேற்ற கலைஞர்களை நேரில் சந்தித்து பாராட்டினார். “இலங்கை மண்ணில் தமிழ் கலையின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த இந்த தருணம் நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்” என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர். சலங்கை ஒலியால் அதிர்ந்த கடற்கரை, தமிழ் கலாசாரத்தின் பெருமையையும் இலங்கைத் தமிழர்களின் கலைத்திறனையும் உலக அரங்கில் வெளிப்படுத்தியதாகக் காணப்பட்டது.
நிகழ்வின் நிறைவில், “சங்கமம் 2026” கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் சான்றிதழ், கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகளால் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வை இலங்கையில் நடத்துவதற்கு முன்னெடுப்பு மேற்கொண்ட பிரதி அமைச்சருக்கு, கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நன்றியைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இவ்வாறான கலாசார நிகழ்வுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.






