
நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று (23) மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 6 மாவட்டங்களில் 6,907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்த நிலைமை காரணமாக கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 64 வயதுடைய ஒருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்த மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்போது 17 தற்காலிக நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 351 குடும்பங்களைச் சேர்ந்த 1,192 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நிலவி வரும் சீரற்ற வானிலையால் 2 வீடுகள் முழுமையாகவும், 807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.





