
தமிழகத்தில் புதிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ள நிலையில், தமிழகச் சட்டசபைக்குப் பயணம் மேற்கொண்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா, இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவைத் தலைவர் JCD பிரபாகரைச் சந்தித்த திலகராஜா, புதிய அரசுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இன்றைய தினம் தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு 144 வாக்குகளினால் நம்பிக்கைப் பிரேரணையை உறுதி செய்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, மலையக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் “ஒரு கோப்பைத் தேநீர்” எனும் நூலையும் அவர் நினைவுப் பரிசாக வழங்கினார்.
தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துச் செய்தியை, சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் ஊடாக திலகராஜா அனுப்பி வைத்தார்
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தாயகம் திரும்பிய தமிழர்களாக வாழ்ந்து வரும் இலங்கை மலையகத் தமிழர்கள், அங்குள்ள மக்களுடன் இரண்டறக் கலந்து கௌரவமாக வாழ்வதற்கான தீர்மானத்தைத் தமிழக அரசவையில் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் நீண்டகாலமாக அகதிகளாகவும், நாடற்றவர்களாகவும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்க மத்திய அரசுடன் இணைந்து ஆவன செய்ய வேண்டும்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையை நேரடியாக அணுகி, ஒரு சுமூகமான தீர்வை எட்ட இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்நாடு என்பது இலங்கைத் தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணாகும். உங்கள் வெற்றியை இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் தமது கொண்டாட்டங்கள் மூலம் கொண்டாடுகின்றனர்.
தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பாரம்பரிய உறவின் நீட்சியாக இந்த புதிய அரசு எமது மக்களின் பிரச்சினைகளில் அக்கறை கொள்ளும் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்” என மயில்வாகனம் திலகராஜா தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.





