
விவசாயத்தை ‘உயிர்காக்கும் துறையாக’ கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இன்று (08) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றினார்.
பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு வியட்நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், “நாங்கள் மானியப் பொருளாதாரத்தில் இருந்து சந்தைப் பொருளாதாரக் கொள்கைக்கு நகர்ந்தோம். விவசாய உற்பத்தியில் வியட்நாம் இன்று முன்னிலையில் இருப்பதற்கு எமது கடின உழைப்பே காரணம்
தற்சார்பு பொருளாதாரக் கொள்கையுடன் நாம் முன்னேறி வருகிறோம்,” எனத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தங்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், அவை சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும் என அவர் உறுதி அளித்தார்.
விவசாயத்தை வெறும் பொருளாதாரத் துறையாகப் பார்க்காமல், ‘உயிர்காக்கும் துறையாக’ கருதி இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
இலங்கையின் டிஜிட்டல் பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு வியட்நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பிராந்திய அமைதியைப் பேணவும் இரு நாடுகளும் கைகோர்க்கும்.
யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளை வியட்நாம் நன்கு அறியும் என்று குறிப்பிட்ட அவர், “யுத்தம் எவ்வளவு கொடுமையானது என்பதை நாங்கள் அறிவோம்.
பாரிய போருக்குப் பின்னர் இலங்கை மீண்டு வந்துள்ள விதம் மதிக்கத்தக்கது. இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் அமைதிக்கு வியட்நாம் என்றும் துணை நிற்கும்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சர்வதேச அரங்கில் வியட்நாம் – தெற்காசியா இடையிலான உறவுப் பாலமாக இலங்கை செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.




