இலங்கை

நவீன வசதிகளுடன் கொழும்பு – புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது

புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று (08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

 

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டமானது, ‘க்ளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு இறுதியில் செயல்படுத்தப்பட்டது.

 

பொதுமக்களுக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

 

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், பேருந்து நிறுத்தக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, ஒரு புதிய தகவல் மையம் நிறுவப்பட்டு, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சுற்றியுள்ள பகுதியும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

 

இப்புனரமைப்புப் பணிகள் சுமார் 585 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன

விமானப்படையினரின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், பல நிறுவனங்களின் பங்களிப்போடு இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

 

பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரம் ஆகிய தகவல்கள் அகன்ற டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்படும்.

 

பேருந்து சேவைகள் மட்டுமன்றி, புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் குறித்த விரிவான தகவல்களையும் பயணிகள் இங்கிருந்தே அறிந்துகொள்ள முடியும்.

 

இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணியும் நாளை (09) தொடங்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புகளுடன் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளின் உத்தேச செலவு 2.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இப்பணிகள் 15 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button