இலங்கை

பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிக்கல்: வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை!

கியூ.ஆர். குறியீட்டு முறைமையினால், புதிதாக இறக்குமதி செய்யப்படும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

 

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைகின்றன.

அங்கிருந்து கொழும்பிற்கு வாகனங்களைக் கொண்டு வருவதற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டால், அதனை மீண்டும் நிரப்புவதற்கு முறையான வசதி இல்லை.

 

இறக்குமதியாளர்கள் தமது தனிப்பட்ட வாகனங்களுக்கான கியூ.ஆர். குறியீடுகளைக் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது.

 

இதனால் மாதத்திற்கு சுமார் 100 முதல் 150 வாகனங்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கு, இந்தச் சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் எனப் பிரசாத் மானகே கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கென பிரத்யேகமான கியூ.ஆர். குறியீட்டு முறையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் இறக்குமதியாளர்களின் வணிகப் பதிவு இலக்கத்திற்கு அமைவாக விசேட எரிபொருள் ஒதுக்கீடு ஒன்றை வழங்குதல் போன்ற வழிகளை அவர் பரிந்துரைத்துள்ளார்.

 

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வாகன இறக்குமதி என்பது அரசாங்கத்திற்கு அதிக வரி வருமானத்தைப் பெற்றுத்தரும் ஒரு முக்கிய துறையாக இருப்பதால், இந்தச் சிக்கலுக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button