
இலங்கை பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவதோடு, பொருளாதார உதவி, வீட்டு வசதி மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான பாதுகாப்பை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (08) கொழும்பு பி.டி.சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) சர்வதேச மகளிர் தின நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் ஒரு அரசாங்கம் சிறந்ததா என்பதைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல், அந்த அரசாங்கத்தின் மீது பெண்கள் கொண்டுள்ள நம்பிக்கையே ஆகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வில் பெண்களின் பெருமளவிலான வருகையானது, தற்போதைய நிர்வாகம் மற்றும் அதன் ஆட்சியின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
நீண்டகாலமாக வலி, கஷ்டங்கள் மற்றும் பாரமான சுமைகளை சுமந்து வரும் இலங்கை பெண்களுக்கு “புன்னகையுடன் கூடிய எதிர்காலத்தை” கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி சில முக்கிய விடயங்களைக் கோடிட்டுக் காட்டினார்.
இதன்படி ஒவ்வொரு பெண்ணும் சிறுமியும் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்டங்களை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் பொருளாதாரத்தில் தீவிரமாகப் பங்கேற்பதற்கு வசதியாக இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் நிதி உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
மேலும் மகளிர் விவகார அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஊடாக குறைந்த வட்டி மற்றும் வட்டியற்ற கடன்கள் வழங்கப்படும் என்பதுடன் சில சந்தர்ப்பங்களில் வங்கி கடன்களுக்கு அரசாங்கமே பிணை வழங்கும் என அவர் தெரிவித்தார்.
அதேபோன்று குடும்பங்களின் சுமையைக் குறைக்க வீடமைப்பு மற்றும் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களையும் ஜனாதிபதி விளக்கினார்.
இதற்கமைய 2026 ஆம் ஆண்டில் 31,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகளுக்கு உதவி வழங்கப்படும்.
சிறுமிகள் ஆபத்தை எதிர்நோக்கும் பாதுகாப்பற்ற வீடுகளைப் புனரமைக்க விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.





