இலங்கை

ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே விரிசல்? : ட்ரம்ப் நிர்வாகத்தின் ரகசிய பேச்சுவார்த்தை குறித்து நெதன்யாகு அச்சம்

ஈரானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா தங்களுக்குத் தெரியாமல் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானுடன் போர் நிறுத்தம் குறித்துப் பேசி வருவதாகத் தமக்குக் கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, நெதன்யாகு வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டதாக ‘Axios’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், “நெதன்யாகுவின் முதுகுக்குப் பின்னால் ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை” என வெள்ளை மாளிகை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரேல் தனது இராணுவ இலக்குகளை அடைவதற்கு முன்னரே, அமெரிக்கா இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சம் இஸ்ரேல் தரப்பில் நிலவுகிறது.

குறிப்பாக, பின்வரும் காரணங்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

 

ஈரானின் வான் பாதுகாப்பு, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கான ஈரானின் கோரிக்கையை “மிகவும் தாமதமானது” எனக் கூறி நிராகரித்துள்ளார்

 

கடந்த சனிக்கிழமை டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலிலிருந்து ட்ரம்ப் நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தங்களைத் தூரவிலக்கிக் கொண்டுள்ளனர்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாமல், அமெரிக்காவுக்குச் சாதகமான ஒருவரைத் தலைவராக்கும் ‘வெனிசுவேலா பாணி’ தீர்வை ட்ரம்ப் விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால், இஸ்ரேல் ஈரானின் முக்கியத் தலைவர்களைத் தொடர்ந்து இலக்கு வைத்து அழித்து வருவதால், அத்தகைய தீர்வுக்கான வாய்ப்பு குறைந்து வருவதாக அமெரிக்கா கருதுகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டம், ஏவுகணைத் திறன் மற்றும் அதன் பினாமி அமைப்புகளை அழிப்பதே போரின் நோக்கம் என அமெரிக்கா கூறினாலும், இஸ்ரேலைப் போல “ஆட்சி மாற்றத்தை” அது இன்னும் நேரடியாக வலியுறுத்தவில்லை.

தற்போது வரை ஈரானின் 49 சிரேஷ்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. “நாங்கள் மனதில் வைத்திருந்த நபர்களில் பெரும்பாலானோர் இப்போது உயிருடன் இல்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளமை, அமெரிக்காவின் திட்டமிடலில் ஏற்பட்டுள்ள சிக்கலை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button