
யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் விவகாரத்தில் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக இருப்பதாகவும், இதன் மூலம் விரைவில் “ஏதாவது ஒரு நல்ல விடயம் நடக்கலாம்” என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அபுதாபியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக, யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 314 போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது. எனினும், யுக்ரைனின் நிலப்பரப்பு தொடர்பான சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் யுக்ரைன் மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும், அதனுடன் இணைந்து அங்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க மற்றும் யுக்ரைன் தரப்பு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உயர்மட்ட இராணுவத் தொடர்புகளை மீண்டும் ஆரம்பிக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
தமது இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்த ட்ரம்ப், தற்போது அதற்கான இராஜதந்திர நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





