
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் ஏனைய தளங்களிலும் முன்னெடுக்கப்படும் பாலியல் ரீதியான மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான (Misogynistic) தாக்குதல்களை ‘பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு’ (WMC) வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தக் கண்டன அறிக்கையில் 188 சிவில் சமூகப் பிரதிநிதிகளும் 27 முன்னணி அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன.
தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பிழையை அடிப்படையாகக் கொண்டு, பிரதமருக்கு எதிரான இழிவுபடுத்தல்கள் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்துள்ளன.
கல்விச் சீர்திருத்தங்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஜனநாயக உரிமை என்றாலும், அதனைப் பயன்படுத்தி ஒரு பெண் தலைவரின் நடத்தையையோ அல்லது பாலினத்தையோ இழிவுபடுத்துவது அரசியல் வன்முறை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய அச்சுறுத்தல்கள் தனிப்பட்ட விமர்சனங்கள் அல்ல, மாறாகப் பெண்களின் அரசியல் பங்கேற்பைத் தடுப்பதற்கான திட்டமிட்ட அரசியல் வன்முறையாகும்.
இவ்வாறான தாக்குதல்கள் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைகளை (CEDAW) மீறும் செயலாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை அரசாங்கம் இணைய வழியிலும் அதற்கு வெளியேயும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இத்தகைய அரசியல் வன்முறைகளைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான கருத்துக்களைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்கள் இவ்வாறான தரக்குறைவான பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண் தலைவர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது என்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குச் சமமானது” என அந்த அறிக்கை நிறைவு பெற்றுள்ளது.





