
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பரப்புகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீட்டர் வரை வீசக் கூடும்.
எனினும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.





