
2026ஐ வரவேற்க இன்னும் சில மணிநேரங்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு புத்தாண்டையும் நாம் இனிதாகத்தான் வரவேற்கிறோம். ஆனால், இயற்கையால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகம் அவற்றின் எதிர்பாராத சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகின்றன.
நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களைச் சந்தித்த நாடுகள் குறித்தும் அவை எத்தகைய பாதிப்புகளைச் சந்தித்தன என்பது குறித்தும் இங்கே விரிவாகக் காண்போம்.
1. கலிபோர்னியாவில் காட்டுத் தீ அமெரிக்கா, நடப்பாண்டில் மிகப்பெரிய காட்டுத் தீயை எதிர்கொண்டது. அமெரிக்கா அவ்வப்போது காட்டுத் தீயை எதிர்கொள்ளும் என்றாலும், கடந்த ஜனவரியில் தெற்கு கலிபோர்னியாவில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட காட்டுத் தீ, மோசமான சேதத்தை விளைவித்தது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப் பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசிய கடுமையான காற்று ஆகியவை காட்டுத் தீ பற்ற காரணமாகின. இந்தக் காட்டுத் தீயில் சுமார், 3,000 ஏக்கர் பகுதிகள் அழிந்து நாசமாகின. 10,000க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலக கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால், சுமார் 1.76 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்தக் காட்டுத் தீ அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகளின் அனைத்துத் தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தன.
2. டெக்சாஸில் பெருவெள்ளம் அமெரிக்காவின் மத்திய பகுதியின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழை, அங்கிருந்த குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுத்தது. கெர்கவுண்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் அங்கு பெய்ததே நிலைமை மோசமாக காரணமானது. குவாடலூப் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 131 பேர் பலியாகினர். பலர் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
3. மியான்மரில் நிலநடுக்கம் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மியான்மரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்றாலும், கடந்த மார்ச் 28 ஆம் திகதி நண்பகல் 12.50 அளவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பேசுபொருளாகின. தரையில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 3,500 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது, 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
4. சூடானில் மண்சரிவு வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள, “கறுப்பு மக்களின் நிலம்” எனப் பொருள்படும் சூடானின் மேற்குப் பகுதியான மர்ரா மலையில் உள்ள டார்பரில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையால், அப்பகுதியில் பெரியளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதில், தராசின் என்ற கிராமமே மண்ணில் புதைந்ததுடன், அங்கிருந்த 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர் குழுவான சூடான் விடுதலை இயக்க இராணுவம் தெரிவித்திருந்தது. சூடான் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் இது பெரும் பாதிப்பைச் சந்தித்தது கவனிக்கத்தக்கது.
5. பாகிஸ்தானில் பெருவெள்ளம் பாகிஸ்தானில் கடந்த ஓகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத மழையால், பஞ்சாப் மற்றும் அங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மொத்தம் 13 கோடி மக்கள்தொகை உள்ள இந்த பஞ்சாப் மாகாணத்தில் 3,100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இவை தவிர, 2,900 சிறு கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்கியதாகச் செய்திகள் வெளியாகின. இந்த வெள்ளப்பெருக்கால், சுமார் 24 இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கால், சுமார் 40 இலட்சம் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
6. இந்தியாவிலும் பெருவெள்ளம் கடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தை வடகிழக்கு மாநிலங்கள் எதிர்கொண்டன. அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால், பிரம்மபுத்திரா, பராக் உள்ளிட்ட 10 நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருகிலிருந்த அருணாச்சல் பிரதேசமும், மேகாலயாவும் பாதிப்பைச் சந்தித்தன. இந்த வெள்ளப் பெருக்கால் அசாமின் 15 மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். மூன்று மாநிலங்களும் உயிரிழப்புகளையும் சந்தித்தன. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். சாலைகளும், வீடுகளும் சேதமடைந்தன. இதே பாதிப்பை மணிப்பூர், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களும் சந்தித்தன.
7. இலங்கையைச் சூறையாடிய ‘டிட்வா’! கடந்த நவம்பர் மாதம் உருவான ’டிட்வா’ புயலுக்கு இலங்கை இரையானது. கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கைப் பேரிடராகும். வரலாறு காணாத வகையில் பெய்த பெருமழையால் பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. புயலின் கோரத்தாண்டவத்தால் மொத்தம் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்ர். மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்த புயலால், இலங்கையில் சுமார் 18 இலட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுமார் 53 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. இந்தப் புயலால், இலங்கை முழுவதும் சுமார் 1,200 இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டிருந்தது.
8. இந்தோனேஷியாவைச் சீர்குலைத்த ’சென்யார்’! தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா ஒரு தீவுக்கூட்ட நாடாக அறியப்படுகிறது. இந்நாடு, ‘பசிபிக் நெருப்பு வலயம்’ என்ற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளதால், உலகின் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்த பகுதியில்தான் நிகழ்கின்றன. இது நடப்பாண்டில், ஒரு மாதத்தில் மட்டும் 1,400 நிலநடுக்கங்களை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்தோனேஷியாவின் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்யார் புயலாக வலுப்பெற்று கடந்த நவம்பர் 26 ஆம் திகதி வடக்கு சுமத்ரா பகுதியில் கரையைக் கடந்தது. இதன்காரணமாக அங்கு கனமழை பெய்து, பல்வேறு இடங்களில் அண்சரிவு ஏற்பட்டது. இதனால், வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் உள்ள 14 இலட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டனர். ‘சென்யார்’ புயலால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்தது. மேலும், 218 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 200 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 581 கல்வி நிலையங்கள் வெள்ளப் பாதிப்புகளால் சேதமடைந்தன. சுமார் 3.11 பில்லியன் டொலர் அளவுக்குப் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
9. தாய்லாந்தைத் தாக்கிய புயல் சென்யார் புயல், தாய்லாந்திலும் தனது கோரமுகத்தைக் காட்டியது. இந்தப் புயலின்போது தாய்லாந்து நாட்டில் பெய்த கனமழையால் அந்நாட்டின் தெற்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் 12 தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த 39 இலட்சம் பேர் தொடர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கனமழையால் 15 இலட்சம் வீடுகளை நீர் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவிலும் பல வீடுகள் இடிந்து வீழ்ந்தன. பல பகுதிகள் நீரில் மூழ்கின. தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 181 பேர் பலியாகினர். இவற்றில் சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர் என அரசு தெரிவித்தது. இந்தப் புயலால் மலேசியாவும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10. சீனாவில் மண்சரிவு – வெள்ளம் வடக்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளம், சீன தலைநகரை பல ஆண்டுகளில் தாக்கிய மிக மோசமான வெள்ளங்களில் ஒன்றாகப் பதிவாகி இருக்கிறது. இந்த வெள்ளத்தால், 80,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதில், குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர். அதிலும் பெய்ஜிங்கின் மலைப்பாங்கான மியுன் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகின.





