சுவிஸ்

சிறு கடைகள் ஒன்றுசேர்ந்தன: தெசினில் புதிய சங்கம்

தெசின் மாநிலத்தில் (Ticino) உள்ள சிறு கிராமக் கடைகள் ஒன்றுசேர்ந்து “Botteghe di Paese” என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளன. லுகானோ (Lugano), மெண்ட்ரிசியோ (Mendrisio) பகுதிகளில் இது தொடங்கியது.

கிராமத்தில் ஒரு கடை மூடினால், கடை மட்டும் மூடுவதில்லை. ஊருக்கே முக்கியமான ஓர் இடம் இல்லாமல் போகிறது என்கிறார் சங்கத்தின் துணைத் தலைவர் லுயிசிட்டோ கோல்டமாய் (Luisito Coltamai). “ஒற்றுமையே பலம்” என்பதுதான் இவர்களின் கொள்கை. பிராந்திய வளர்ச்சி அமைப்புகளும் இதற்கு ஆதரவு தருகின்றன.

இந்தக் கடைகள் சிறியவை. ஒரு சின்னப் பிரச்சினை வந்தாலும் சமாளிப்பது கடினம். வேலை செய்பவர் நோய்வாய்ப்பட்டால் உடனே மாற்று ஆள் கிடைக்காது. ஃப்ரிட்ஜ் பழுதானால் செலவு அதிகம். அப்போது இன்னொரு உறுப்பினர் தன்னுடையதைக் கடனாகத் தரலாம். எல்லோருக்கும் சேர்த்து காப்பீட்டுக் கட்டணத்தைப் பேசிக் குறைக்கும் யோசனையும் இருக்கிறது.

காடெமாரியோ (Cademario) கிராமத்தில் மளிகைக் கடை நடத்தும் வின்செங்சா ஜொவினாட்சோ ரோமானோ (Vincenza Giovinazzo Romano) இந்தச் சங்கத்தில் உறுப்பினர். 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கடை நடத்துகிறார். சமீபத்தில் இன்னொரு கடை மூடியது அவருக்கு மிகவும் வருத்தம். எல்லா வியாபாரிகளுக்கும் ஒரே மாதிரிப் பிரச்சினைகள்தான், யாரும் தனியாக இல்லை என்கிறார்.

இப்போதைக்கு தெசினின் தெற்குப் பகுதிக்கு மட்டுமே இந்தச் சங்கம். முதல் ஆண்டு முடிந்த பிறகு, வடக்குப் பகுதிக் கடைகளுடனும் சேர்ந்து செயல்பட விரும்புகிறார்கள்.


மூலம்: RSI
புகைப்படம்: Bernd 📷 Dittrich / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button