சுவிஸில் பழுதான வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபகரணங்களை பெரும்பாலான கடைகள் பழுது பார்ப்பதில்லை. அவற்றை நேராக மறுசுழற்சிக்கு (recycling) அனுப்பி விடுகின்றன.
கடந்த 23 ஆண்டுகளில் மறுசுழற்சிக்கு வரும் உபகரணங்களின் அளவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உதிரிப் பாகங்கள் கிடைப்பது கஷ்டம். புதிய உபகரணங்களில் உடையக்கூடிய பிளாஸ்டிக் அதிகம். சில கம்பெனிகளின் மெஷின்களை இப்போது பழுது பார்க்கவே முடியாது என்கிறார்கள் பழுதுபார்ப்பவர்கள்.
செலவும் ஒரு பெரிய காரணம். டெக்னீஷியனை வீட்டுக்கு கூப்பிட்டாலே 150 முதல் 200 பிராங்க் கேட்கிறார்கள். பல நேரங்களில் பிரச்சினை சின்னதுதான். மெஷினுக்குள் சிக்கிய ஒரு சாக்ஸ், அல்லது பம்பை அடைத்த காசு. ஆனாலும் பலர் புதிய மெஷினையே வாங்கி விடுகிறார்கள். “தூக்கிப் போடும்” பழக்கத்தில் சுவிஸ் சிக்கியிருக்கிறது என்கிறார் கிரீன்பீஸ் (Greenpeace) அமைப்பின் நிபுணர்.
2021 முதல் பெரிய உபகரணங்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை உதிரிப் பாகங்களை தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும். 2024-இல் மாற்றப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, உபகரணம் எவ்வளவு எளிதாக பழுது பார்க்கலாம் என்பதைக் காட்டும் குறியீடு கொண்டு வர முடியும். ஆனால் அது இன்னும் கடைகளில் வரவில்லை.
ஐரோப்பிய ஒன்றியம் 2024-இல் “பழுது பார்க்கும் உரிமை” சட்டத்தை நிறைவேற்றியது. சுவிஸில் இதே போன்ற முன்மொழிவு நான்கு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் விவாதத்தில் உள்ளது. அரசியல் விருப்பம் இல்லை என்கிறது கிரீன்பீஸ்.
மூலம்: RSI
புகைப்படம்: PlanetCare / Unsplash





