இந்தியாஉலகம்

இந்திய பைலட்டை கோடாரியால் தாக்கிய ஓமன் துணை பைலட்… வெளியாகும் அதிர்ச்சி பின்னணி!

வானில் ஒரு மரண போராட்டம்: கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற Flydubai விமானத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நடந்தது.

விமானத்தில் துணை பைலட்டாக பணியாற்றிய ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹமாமி, இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கி விமானத்தை கடத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகின.

முதலில் பைலட் ஸ்மித்தை கத்தியால் தாக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது காக்பிட்டில் இருந்த அவசரகால கோடாரியால் (Crash Axe) அவர் தாக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஸ்மித் மச்சாரின் வலது கை துண்டிக்கப்படும் அளவுக்கு படுகாயமடைந்ததாகவும், இருந்தபோதிலும் அவர் காக்பிட் கதவைத் திறந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட 4 இஸ்ரேலிய பயணிகள் உடனடியாக காக்பிட்டுக்குள் சென்று துணை பைலட்டை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதையடுத்து விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சவுதி போலீஸார் ஹமாம் அல் ஹமாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரக அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு புலனாய்வுக் குழு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

காக்பிட்டில் கோடாரி ஏன் இருந்தது?

சர்வதேச விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி, வணிக விமானங்களில் அவசரகால கோடாரி இருப்பது கட்டாயமாகும்.

விபத்து அல்லது அவசரநிலை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக இந்தக் கருவி பைலட்டுகளின் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்படுகிறது.

முன்பு இந்த கோடாரிகள் பயணிகள் அமரும் கேபின் பகுதியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடைபெற்ற பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக காக்பிட்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துணை பைலட்டின் முந்தைய பின்னணி குறித்து அதிர்ச்சி தகவல்கள்

சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஹமாம் அல் ஹமாமி ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தாய் சிரியாவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஓமனுக்கு வெளியிலும், குறிப்பாக சிரியாவிலும் கழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் Oman Air நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியதாகவும், துணை பைலட் பயிற்சியாளராக இருந்தபோது அவரிடம் தீவிரவாதக் கருத்துகளுடன் தொடர்புடைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் அவர் நிர்வாகப் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டாலும், பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்டதால் விமானம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் துபாயை தலைமையிடமாகக் கொண்ட Flydubai நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அதுவும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் இஸ்ரேலையும் இணைக்கும் முக்கியமான விமானப் பாதையில் அவருக்கு விமானம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

“ஏற்கனவே விமானம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் எப்படி மீண்டும் துணை பைலட்டாக பணியமர்த்தப்பட்டார்?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள்

Flydubai விமான சம்பவத்துக்குப் பிறகு சுமார் 9 மணி நேரத்துக்குள், துணை பைலட்டின் சமூக வலைதளக் கணக்கில் இரண்டு பதிவுகள் வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிவில் Boeing 737 MAX விமானங்களின் காக்பிட்களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பல வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றில் ஒரு வீடியோவின் இறுதியில் முன்னாள் அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்குப் பிறகு அந்த அமைப்பின் தலைவராக இருந்த அய்மான் அல்-ஜவாஹிரி உள்ளிட்ட சிலரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு பதிவில் இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களான மெக்கா, மதீனா மற்றும் ஜெருசலேம் ஆகியவற்றை சித்தரிக்கும் AI மூலம் உருவாக்கப்பட்ட படம் இடம்பெற்றிருந்ததாகவும், அதன் பின்னணியில் மரணத்துக்கு அஞ்சாதிருப்பது, கண்ணியத்தைப் பாதுகாப்பது போன்ற கருத்துகள் அடங்கிய கவிதை இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தற்போது நீக்கப்பட்ட X கணக்கில் அவர் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகள்?

ஹமாம் அல் ஹமாமி பிரிட்டனில் உள்ள பக்கிங் ஹாம்ஷையர் நியூ பல்கலைக்கழகத்தில் விமானப் போக்குவரத்து மேலாண்மையும், ஆஸ்திரேலியாவில் பொறியியலும் படித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அவரது பெயரில் வெளியானதாகக் கூறப்படும் ஒரு பதிவில், திருமணம் செய்யும் பெண் முகத்தை மறைக்கும் நிகாப் அணிய வேண்டும் என்றும், திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றும் பணிச்சூழல் பெண்களை சீரழிக்கிறது என்ற கருத்தும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன

தற்போது முக்கியமாக விசாரிக்கப்படும் கேள்விகள்:

1. விமானத்தை கடத்தும் நோக்கம் அவருக்கு இருந்ததா?
2. அவர் தனியாக செயல்பட்டாரா?
3. ஏதேனும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததா?
4. முன்பே விமானம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தால் Flydubai நிறுவனத்தில் அவர் எப்படி பணியமர்த்தப்பட்டார்?
5. அவரது பின்னணி மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முறையாக நடத்தப்பட்டனவா?
6. சமூக வலைதளங்களில் வெளியானதாகக் கூறப்படும் பதிவுகள் உண்மையில் அவருடையவையா?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் விசாரணை முடிவில்தான் தெளிவான பதில் கிடைக்கும்.

இந்நிலையில், உயிரைப் பணயம் வைத்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலும், ஆபத்தான நேரத்தில் உடனடியாக செயல்பட்ட 4 இஸ்ரேலிய பயணிகளின் தைரியமும் பாராட்டுக்குரியது.

ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் இருக்கும் நிலையில், பைலட்டுகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பின்னணி சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது…

#Flydubai #SmithMachar #IndianPilot #OmanPilot #HamamAlHamami #AviationSecurity #Dubai #Israel #SaudiArabia #FlightSafety #BreakingNews

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button