
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கு தொடர்பில் வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (29) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ரூபா 100 மில்லியன் நிதி முறைகேடு மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கிலேயே கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக இன்று வரை வழங்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் மற்றும் எயார்பஸ் விவகாரம் தொடர்பான வழக்குகளுக்காக நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அதன்படி, முன்னதாக எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘கிரிஷ்’ வழக்கில் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.





