
சுவிட்சர்லாந்தின் மேற்கு பிராந்தியத்தில் 1875ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வந்த சீஸ் மாதிரிகளை ஆய்வு செய்ததில், நவீன உற்பத்தி முறைகள் சீஸில் காணப்படும் பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையைக் குறைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், கால்நடை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் தடயங்களும் பழைய சீஸ் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
அக்ரோஸ்கோப் (Agroscope) மற்றும் சூரிச் மத்திய தொழில்நுட்பக் கல்லூரி (ETH Zurich) ஆகியவற்றின் தலைமையிலான ஆய்வுக் குழு, 1875 முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த எட்டு வலே ரக்லெட் (Valais Raclette) சீஸ் சக்கரங்களை ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வு தொடர்பான முடிவுகள் வியாழக்கிழமை Current Biology என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த எட்டு சீஸ் சக்கரங்களும் ஒரே ஆல்ப்ஸ் மலைப்பகுதி சீஸ் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டவை. பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட புதைக்கும் மரபின்படி அவை பாதுகாக்கப்பட்டதால், காலவரிசைப்படியான தனித்துவமான மாதிரித் தொகுப்பாக ஆய்வுக்கு கிடைத்துள்ளன.
1875ஆம் ஆண்டு சீஸில் அதிக பாக்டீரியா பன்முகத்தன்மை
டிஎன்ஏ (DNA) ஆய்வுகளின்படி, 1875ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மிகப் பழமையான சீஸ், நவீன சீஸ்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்டதுடன், அதிக பாக்டீரியா பன்முகத்தன்மையையும் கொண்டிருந்தது.
அதில் மனிதக் குடலில் அல்லது தாவரங்களில் பொதுவாகக் காணப்படும் பல்வேறு பாக்டீரியாக்கள் இருந்தன.
அக்காலத்தில் பின்பற்றப்பட்ட சீஸ் உற்பத்தி முறைகளே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலப்போக்கில் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட தரப்படுத்தல், மேம்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகள் மற்றும் வணிக ரீதியாகத் தயாரிக்கப்பட்ட நொதித்தல் நுண்ணுயிர் கலவைகளின் பயன்பாடு ஆகியவை நவீன சீஸ்களில் பாக்டீரியா பன்முகத்தன்மை குறைவதற்கு வழிவகுத்துள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டுத் தடயங்கள்
கால்நடை மருத்துவத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்ட வரலாற்றையும் சீஸ் மாதிரிகள் வெளிப்படுத்தியுள்ளன.
1875ஆம் ஆண்டு சீஸில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் மரபணுக்கள் காணப்படவில்லை. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியைச் சேர்ந்த மாதிரிகளில் இத்தகைய மரபணுக்கள் அதிகளவில் கண்டறியப்பட்டன.
குறிப்பாக, 1975ஆம் ஆண்டு சீஸில் டெட்ராசைக்ளின் (Tetracycline) மருந்துக்கு எதிர்ப்புத் திறனை வழங்கும் மரபணுக்கள் அதிக செறிவில் காணப்பட்டன.
சுவிட்சர்லாந்தில் 1950களிலிருந்து இந்த மருந்தின் பயன்பாடு பரவலாகத் தொடங்கியிருந்தது.
எனினும், 2017ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மிக அண்மைய சீஸ் மாதிரியில் இத்தகைய எதிர்ப்பு மரபணுக்கள் கண்டறியப்படவில்லை.
142 ஆண்டுகளாக நிலைத்திருந்த வைரஸ்கள்
சீஸ் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் (Lactic acid bacteria), 1875ஆம் ஆண்டிலேயே சீஸ் உற்பத்திச் சூழலுக்கு ஏற்றவாறு பரிணாம மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
எனவே, சீஸ் தயாரிப்பு முறைக்கு ஏற்றவாறு இந்தப் பாக்டீரியாக்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்ட செயல்முறை, ஆய்வில் உள்ள காலப்பகுதிக்கு முன்பே பெருமளவில் இடம்பெற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நொதித்தல் நுண்ணுயிரிகளைத் தாக்கி, உற்பத்தி நிலையங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியோஃபேஜ்கள் (Bacteriophages) எனப்படும் வைரஸ்களும் 1875ஆம் ஆண்டு சீஸில் காணப்பட்டன.
கடந்த 142 ஆண்டுகளில் இந்த வைரஸ் சமூகங்களின் அமைப்பு ஒப்பீட்டளவில் நிலையாக இருந்துள்ளது.
நுண்ணுயிர்களின் டிஎன்ஏவை நீண்டகாலம் பாதுகாத்து வைப்பதற்கான சிறந்த வரலாற்று ஆவணமாக சீஸ் விளங்குகிறது என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்






