
சுவிட்சர்லாந்தின் லுகானோ விமான நிலையத்தின் இயக்க உரிமத்தை மேலும் 30 ஆண்டுகளுக்கு சுவிஸ் போக்குவரத்து அமைச்சு புதுப்பித்துள்ளது.
புதிய உரிமம் 2026 செப்டெம்பர் 16 முதல் 2056 செப்டெம்பர் 15 வரை செல்லுபடியாகும்.
இந்த நீட்டிப்பு, விமான நிலையத்திற்கு நீண்டகால திட்டமிடலுக்கான வாய்ப்பை வழங்குவதுடன், லுகானோ மற்றும் முழு டிசினோ மண்டலத்தின் போக்குவரத்து, பொருளாதாரம் மற்றும் கவர்ச்சிக்கு முக்கியமான உள்கட்டமைப்பாக விமான நிலையத்தை மேலும் மேம்படுத்த உதவும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிதிநிலையில் முன்னேற்றம்
லுகானோ விமான நிலையம் தற்போது படிப்படியான நிலைத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விமான நிலையம் CHF 200,000-க்கும் அதிகமான செயல்பாட்டு இலாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் CHF 100,000-க்கும் குறைவான நட்டம்ஏற்பட்டிருந்தது.
மேலும், வருவாய் CHF 7 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், மொத்த செலவுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட சற்று குறைவாக இருந்துள்ளன.
ஐரோப்பிய விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் சுவிட்சர்லாந்திற்குள் உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதிக்கும் வகையிலான மாற்றத்திற்கு சுவிஸ் மேலவை அளித்துள்ள ஆதரவும் விமான நிலையத்தின் எதிர்காலத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதன் மூலம் லுகானோ–ஜெனீவா நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் லுகானோ விமான நிலையத்தை இயக்கிய நிறுவனம் திவால்நிலை மற்றும் கலைப்பு நிலைக்கு சென்றது. விமான சேவைகளைத் தொடரும் நோக்கில் லுகானோ நகர நிர்வாகம் விமான நிலையத்தின் பொறுப்பை ஏற்று தற்காலிகமாக இயக்கி வந்தது.
பின்னர் தனியார்மயமாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், தேர்வு செய்யப்பட்ட தனியார் கூட்டமைப்பு காலக்கெடுவுக்குள் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்கத் தவறியதால் 2021ஆம் ஆண்டு அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.





