
கனடா கல்வி அனுமதி விதிகளில் (Canada Study Permit Rules) செப்டம்பர் 1ஆம் திகதி முதல், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு
இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!
அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும்.
ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.
மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.
இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு





