
1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.

எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார்.
அந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது
இலங்கை அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும் ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.
தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
19.07.1987 இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர் அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாக வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.
இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட திரு.பிரபாகரன் அவர்களின் அந்த இந்தியப் பயணம் 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.
புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள ‘அஷோகா’ ஹோட்டலில் 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவதை விட ‘சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்’ என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் ‘கறுப்புப் பூனைகள்’ பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் ‘கறுப்புப் பூனை’ பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.
இந்திய அரசினதும் பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த ‘அஷோக்கா ஹோட்டல்’ சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.
இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.
இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றார்கள்.
இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும் இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் பல இராணுவ ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும் எதேச்சாதிகாரத்தையும் நம்பிக்கைத் துரோகத்தையும் ஈழத் தமிழர்கள் இன்றுவரை மனதினில் நிறுத்தியபடிதான் இருக்கின்றார்கள்.
24ம் திகதி முதல் ‘அஷோகா’ ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார்.
புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் ‘புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்’ என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.
சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி பலவாறான நெருக்குதல்களையும் மிரட்டல்களையும் பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.
வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததானது ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் மன்னிக்கமுடியாத துரோகத்தை ஈழத் தமிழருக்கு வெளிப்படுத்தியிருந்தது.
இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி அப்பொழுது தி.மு.கா.வின் ‘போர் வாள்’ என்று அழைக்கப்பட்டவரும் தற்போதைய ம.தி.மு.கா.வின் தலைவரும் ஈழ விடுதலை பற்றி பேசி ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபாலசாமி (வைகோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.
அஷோகா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர் திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபாலசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபாலசாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்
அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்: நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும் பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் சயனைட் கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால் பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ நினைவுகூர்ந்திருந்தார்.
இந்திய அரசினதும் பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே பின்னாளில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.
இந்தியத் தலைவருக்கு எதிரான துன்பியல் சம்பவம் இடம் பெறவும் இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இப்படியெல்லாம் இந்தியாவால் நெருக்கடிக்குள்ளான நிலையில் அந்த ஒப்பந்தத்தை ஏற்றதாகக் கூறி 02.08.1987 அன்று யாழ்ப்பாணம் திரும்பிய புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஒரு உரையை நிகழ்த்தினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழப் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது உரை என்று அந்த உரை பிரசித்தி பெற்றிருந்தது.
திரு.பிரபாகரன் அவர்களது அந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்றே வரலாற்றில் பதிவாகியுள்ளது. ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ ‘திம்புக் கோட்பாடு’ என்பது போன்று சுதுமலையில் புலிகளின் தலைமை ஆற்றிய உரை ‘சுதுமலைப் பிரகடனம்’ என்றே அழைக்கப்படுகின்றது.




வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பிரகடனம்:
எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே…
இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் – இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.
பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன… பல கேள்விக்குறிகள் இருந்தன.
இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம். ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.
இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சர்யப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய – இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின்கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது.
ஆகவேதான், இந்திய அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை.
எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது?
இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது… எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது… எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது… எமது ஆயுதப் போராட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனை ஈட்டி, எத்தனையோ உயிர்பலி கொடுத்துக் கட்டி எழுதப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒருசில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
திடீரெனக் கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணியாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், எமது பிரச்னைகளை மனம்திறந்து பேசினேன்.
சிங்கள் இனவாத அரசின்மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதயும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார்.
பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க, இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்தியச் சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.
நாம் எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்புக்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விடிவுக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.
நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடம் பெற்றுக்கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது, இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது.
நாம் ஆயுதங்களைக் கையளிக்காதுப் போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்பாக்ய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவருடைய உயிருக்கும், பாதுகாப்புக்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள் இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.
தமிழீழ லட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால், எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.
தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.






