இலங்கை

சுவிஸ் பேர்ண் நகரில் ‘வணக்கம்’ உணவகம் புதிய நிர்வாகத்தின் கீழ் கோலாகலமாக மீள்திறப்பு!

பேர்ண்:

சுவிற்சர்லாந்து பேர்ண் நகரில் பல்லின மற்றும் பல மதங்கள் இணைந்து செயலாற்றி வந்த ‘பல்மத இல்லத்தால்’ (House of Religions) நடத்தப்பட்டு வந்த ‘வணக்கம்’ (Vanakkam) உணவகம், சில காரணங்களால் தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், உணவகத்தைத் தொடர்ந்து சிறப்பாக நடத்தும் பொருட்டு பேர்ண் சிவன் கோயிலும் ‘பல்மத இல்லமும்’ புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. இதன் அடிப்படையில், உணவகத்தின் நிர்வாகப் பொறுப்பு தற்போது பேர்ண் சிவன் கோயிலிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, நேற்று (02.08.2026) பல்மத இல்லத்தின் தலைவரின் தலைமையில் வணக்கம் உணவகத்தின் மீள்திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் மக்களின் தொன்மையான பண்பாட்டு மரபிற்கு அமைவாக மங்கல விளக்கேற்றலுடன் விழா இனிதே தொடங்கியது. பல்மத இல்லத்தின் இளையோர்கள் மற்றும் திருத்தொண்டர்களின் சிறப்பான ஒத்துழைப்போடு இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், நிர்வாகப் பொறுப்பாளர்கள் சிலர் உணவகத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினர்.

“வணக்கம் உணவகம் எதிர்காலத்தில் எவ்வாறு இயங்கும் என்பது குறித்தும், இருதரப்பு பரஸ்பர நம்பிக்கையோடு 246-க்கும் மேற்பட்ட கையொப்பங்களைப் பெற்று, உலக மக்கள் அனைவருக்குமான உணவகமாக இதனைத் தொடரும் நோக்கத்துடனுமே இப்புதிய தொடக்கம் அமைந்துள்ளதாக” நிர்வாகிகள் தமது உரையில் தெரிவித்தனர்.

நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்ட மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், உலகத்திலேயே யூதர்கள் அல்லாதவர்கள் சமைக்கும் உணவை யூத சமூகத்தினரும் உண்ணும் வகையில் இந்த உணவகம் திகழ்கிறது. இதற்கான சிறப்புப் பயிற்சி மற்றும் கற்கைநெறிகளை பூர்த்தி செய்து, யூத மக்களின் முறைப்படியான அனுமதியையும் ஒப்புதலையும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

மீள்திறப்பு விழாவின் போது, மிகவும் சுவையான மற்றும் உலகத் தரத்திலான உணவுகள் அழகிய முறையில் பரிமாறப்பட்டன. பத்துக்கும் மேற்பட்ட சுவையான கறி வகைகளுடன் பல்லின மக்களுக்கும், இளையோர் அமைப்பினரால் உணவு உபசரிக்கப்பட்டது வருகை தந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

‘வணக்கம்’ உணவகம் வணிக ரீதியாகப் பெரும் வெற்றியடைந்து, பல்லின மக்களிடையேயும் தொடர்ந்து நல்வரவேற்பைப் பெற வேண்டும் என சுவிஸ் தமிழர் தகவல் மையம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button